பொசன் தன்சல்கள் குறித்து பொலிஸார் முக்கிய அறிவிப்பு

எதிர்வரும் பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு தன்சல்கள் மற்றும் தோரணங்களை ஏற்பாடு செய்யும் போது, அப்பகுதி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கு (OIC) அது குறித்து அறிவிப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் என வீதிப் பாதுகாப்பு திணைக்களத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டப்ளியூ. பி. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், விபத்துக்களைக் குறைக்கும் நோக்கிலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

“பொதுமக்களுக்குக் காட்சிப்படுத்தும் வகையில் ஏதேனும் ஏற்பாடுகளைச் செய்வதாக இருந்தால், நிலையப் பொறுப்பதிகாரியின் ஒருங்கிணைப்புடன் தேவையான வழிகாட்டல்களைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாகனங்களை எவ்வாறு நிறுத்துவது போன்ற விபரங்கள் இதில் அடங்கும். நாம் தன்சல்களை நடத்த வேண்டாம் என்று கூறவில்லை. அதனை முறைப்படுத்துமாறுதான் கூறுகிறோம். இந்த பொசன் பண்டிகையின் போது நிலையப் பொறுப்பதிகாரிகள் தலையிட்டு, முறைப்படி தன்சல்களை ஏற்பாடு செய்ய வேண்டும்.”

இதேவேளை, வீதிகளில் இடம்பெறும் விபத்துக்கள் குறித்து பொலிஸாருக்கு அறிவிக்காத சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் டப்ளியூ. பி. ஜே. சேனாதீர குறிப்பிட்டுள்ளார்.

“எங்களிடம் உள்ள புள்ளிவிபரங்களின்படி, பதிவாகும் விபத்துக்களின் எண்ணிக்கையை விட அதிகமான விபத்துக்கள் உண்மையில் நடக்கின்றன. சில சந்தர்ப்பங்களில், கவனக்குறைவினால் விபத்து ஏற்பட்ட பிறகு, அவர்கள் அதனை வீதியிலேயே பேசித் தீர்த்துக்கொள்கிறார்கள். அனைத்து விபத்துக்களையும் கட்டாயம் அறிக்கையிட்டு, விபத்துப் பதிவேட்டில் பதிவு செய்யுமாறு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார். விபத்து நடந்து 24 மணித்தியாலங்களுக்குள் அது குறித்து அறிவிக்கத் தவறினால் அது குற்றமாகும். அதனைப் பொலிஸாருக்குத் தெரிவிப்பது சாரதியின் பொறுப்பாகும். இல்லையெனில், விபத்தை மறைத்த குற்றத்திற்கும் அவர் உள்ளாக்கப்படுவார்.”

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், போதைப்பொருள் பாவித்துப் வாகனம் செலுத்திய 7,500க்கும் மேற்பட்ட சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துப் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்பு திணைக்களத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டப்ளியூ. பி. ஜே. சேனாதீர மேலும் தெரிவித்தார்.

“கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் பாரதூரமான வீதி விபத்துக்கள் 98 ஆல் அதிகரித்துள்ளதுடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 104 ஆல் அதிகரித்துள்ளது. எனினும், வாராந்த அடிப்படையில் பார்க்கும் போது இந்த விபத்துக்கள் குறைவடைந்து வருகின்றன. இது தொடர்பாக நாம் விசேட நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளோம்.”

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore