சீனாவில் வெளியிடப்பட்ட ஒரு விளம்பரம் தொடர்பாக கடும் எதிர்ப்புகள் எழுந்ததைத் தொடர்ந்து, Dettol நிறுவனம் மன்னிப்பு கோரி அந்த விளம்பரத்தை திரும்பப் பெற்றுள்ளது.
சீன சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட அந்த விளம்பரத்தில், ஒரு ஆண் “மற்ற ஆண்களுடன் தொடர்பில் இல்லாத, சுத்தமான பெண்ணை திருமணம் செய்ய விரும்புகிறேன்” என்று கூறுவது இடம்பெற்றிருந்தது.
இந்த விளம்பரம் சில ஆண்களிடையே காணப்படும் நச்சுத்தன்மையான மனப்போக்குகளை விமர்சிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டதாக கூறப்பட்டாலும், பலர் இதை பெண்களை அவமதிக்கும் மற்றும் பாலினப் பாகுபாட்டை ஊக்குவிக்கும் விளம்பரமாக விமர்சித்தனர்.
இதையடுத்து சீன சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்புகள் எழுந்ததுடன், சிலர் Dettol தயாரிப்புகளை புறக்கணிக்குமாறும் அழைப்பு விடுத்தனர்.
சர்ச்சை தீவிரமடைந்த நிலையில், Dettol நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், குறித்த விளம்பரம் நிறுவனத்தின் அடிப்படை மதிப்புகளையும் கொள்கைகளையும் பிரதிபலிப்பதில்லை என்றும், அது பலரின் மனதை புண்படுத்தியதற்காக வருந்துவதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், அந்த விளம்பரம் உடனடியாக நீக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறாமல் இருக்க தனது விளம்பர மற்றும் சந்தைப்படுத்தல் நடைமுறைகள் மீளாய்வு செய்யப்படும் என்றும் நிறுவனம் கூறியுள்ளது.
சமீப ஆண்டுகளில் சீனாவில் பாலின சமத்துவம் மற்றும் விளம்பர தரநிலைகள் தொடர்பான விவாதங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
Dettol நிறுவனம், பன்னாட்டு சுகாதார மற்றும் சுத்திகரிப்பு தயாரிப்பு நிறுவனமான Reckitt நிறுவனத்திற்குச் சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.





