நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வெனிசுலாவுக்கு, ‘ஒப்பரேஷன் அமிஸ்தாத்’ (Operation Amistad) திட்டத்தின் கீழ் இந்தியா தனது மனிதாபிமான நிவாரண நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, இந்திய இராணுவம் வெனிசுலாவில் கள மருத்துவமனை (Field Hospital) ஒன்றை அமைத்து, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர மருத்துவ சேவைகளை வழங்கி வருகிறது.
இந்த நடவடிக்கையில் 41 பேர் கொண்ட இந்திய இராணுவக் குழு ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், அதில் 9 மருத்துவர்கள் இடம்பெற்றுள்ளனர். காயமடைந்தவர்களுக்கு அவசர சிகிச்சை, அறுவைச் சிகிச்சை மற்றும் உயிர்காக்கும் மருத்துவ சேவைகளை வழங்கும் வசதிகளும் இதில் உள்ளன.
மேலும், இந்திய விமானப்படையின் C-17 விமானங்கள் மூலம் 35 டன் நிவாரணப் பொருட்கள், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் BHISHM அவசர மருத்துவ அமைப்புகளும் வெனிசுலாவுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இந்நடவடிக்கை, பேரிடர்களால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கும் இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் வெளிப்படுத்துவதாக இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.





