தரம் 1 மாணவர் சேர்க்கைக்கான புதிய சுற்றறிக்கை திருத்தப்படாவிட்டால், கல்வித் துறைக்கான தங்களது சேவையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் (FUTA) எச்சரித்துள்ளது.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த FUTA-வின் ஊடகப் பேச்சாளர் சாருதத்த இல்லங்கசிங்க, அரசுப் பரீட்சை வினாத்தாள் தயாரித்தல் மற்றும் விடைத்தாள் மதிப்பீட்டில் ஈடுபடும் பேராசிரியர்கள் அந்த விவரங்களை பாடசாலைகளுக்கு தெரிவிக்க வேண்டும் என புதிய சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தேசிய பரீட்சைகளின் இரகசியத்தன்மையை பாதுகாப்பதற்காக இவ்வாறான தகவல்கள் மிகவும் இரகசியமாக வைக்கப்படுவதாகவும், அவற்றை கட்டாயமாக வெளிப்படுத்துவது பரீட்சை முறையின் நம்பகத்தன்மையை பாதிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், இந்த சுற்றறிக்கை பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் பிள்ளைகள் பாடசாலைகளில் சேர்க்கப்படுவதில் கட்டுப்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவும் அவர் கவலை வெளியிட்டார்.
இதுதொடர்பாக, சுற்றறிக்கையை உடனடியாக இடைநிறுத்தி திருத்தம் செய்து மீள வெளியிடுமாறு ஜனாதிபதியிடம் FUTA எழுத்துமூலம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஒரு வாரத்திற்குள் ஜனாதிபதி தலையீடு செய்யாவிட்டால், கல்வித் துறைக்கான சேவையை தொடர்வதா இல்லையா என்பது குறித்து இறுதி முடிவு அறிவிக்கப்படும் என FUTA தெரிவித்துள்ளது.





