வெவ்வேறு விபத்துகளில் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட நால்வர் பலி

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற நான்கு வெவ்வேறு வீதி விபத்துகளில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்துகள் நேற்று (07) தலாவ, கரந்தெனிய, புளியங்குளம் மற்றும் ஆனமடுவ ஆகிய பொலிஸ் பிரிவுகளில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அனுராதபுரம் – தலாவ பிரதான வீதியின் சுனாமி சந்திக்கருகில், கெப் (Cab) ரக வாகனமொன்று மற்றுமொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 27 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் ஹிதோகம பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன், காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் சாரதி ஆவார்.

கெப் ரக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், தலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, மடக்கும்புர கொடவெல குறுக்கு வீதியில் மடக்கும்புர நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, அதே திசையில் முன்னால் சென்ற மிதிவண்டியின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் மிதிவண்டி ஓட்டுநரும் பொரகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மிதிவண்டி ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கரந்தெனிய பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவர் ஆவார்.

மேலும், ஏ-09 வீதியின் ராமநூர் பகுதியில் யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வேன் ஒன்று வீதியைக் கடக்க முயன்ற பாதசாரி மீது மோதியுள்ளதுடன், இதனால் தூக்கி வீசப்பட்ட பாதசாரி எதிரே வந்த கார் ஒன்றில் சிக்கி விபத்துக்குள்ளாகியுள்ளார்.

விபத்தில் காயமடைந்த பாதசாரி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் ஆவார்.

இதேவேளை, ஆடிகம கீரியன்கள்ளிய வீதியின் 12 ஆம் மைல்கல் தூணுக்கு அருகில், ஆடிகம நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று மற்றுமொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது எதிரே வந்த டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் முந்தல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் ஆடிகம பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஆவார்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore