2025 ஆம் ஆண்டிலிருந்து சிகரெட் வரி விதிப்பு உலக சுகாதார அமைப்பு (WHO) பரிந்துரைக்கும் அளவுக்கு குறைவாக இருந்ததால், இலங்கை அரசுக்கு ரூ.25 பில்லியனுக்கும் அதிகமான சாத்தியமான வரி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வெரிட்டே ரிசர்ச் (Verité Research) வெளியிட்டுள்ள புதிய Cigarette Tax Leakage Tracker ஆய்வு தெரிவிக்கிறது.
PublicFinance.LK இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த தரவுகளின்படி, இலங்கை ஒவ்வொரு வினாடிக்கும் ரூ.547, ஒவ்வொரு நிமிடத்துக்கும் ரூ.32,842, ஒரு நாளுக்கு ரூ.47.3 மில்லியன், ஒரு மாதத்திற்கு ரூ.1.4 பில்லியன் மற்றும் ஒரு ஆண்டுக்கு ரூ.17.3 பில்லியன் வருமானத்தை இழந்து வருகிறது.
2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களிலேயே இந்த வருமான இழப்பு ரூ.8 பில்லியனை கடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைப்படி, சிகரெட் சில்லறை விலையின் குறைந்தது 75% வரியாக விதிக்கப்பட வேண்டும். இலங்கை கடைசியாக 2018 ஆம் ஆண்டு 74% என்ற அளவுக்கு இந்த இலக்கை எட்டியிருந்தது. எனினும், 2025 முதல் வரி விகிதம் 67% ஆகக் குறைந்ததால், அரசின் சாத்தியமான வருவாய் கணிசமாக குறைந்துள்ளதாக ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
சிகரெட் வகைகளுக்கான உற்பத்தி வரியை (Excise Tax) அதிகரிக்கும் வகையில் அரசாங்கம் உடனடியாக வர்த்தமானி அறிவிப்பு வெளியிட்டால் இந்த வருவாய் இழப்பைத் தவிர்க்க முடியும் என வெரிட்டே ரிசர்ச் பரிந்துரைத்துள்ளது.
இதன்படி, 60 மில்லிமீட்டர் வரை உள்ள சிகரெட்டுகளுக்கான வரியை ரூ.19.35 இலிருந்து ரூ.22.90 ஆகவும், 60–67 மில்லிமீட்டர் சிகரெட்டுகளுக்கான வரியை ரூ.50.15 இலிருந்து ரூ.60.11 ஆகவும் உயர்த்துவது உள்ளிட்ட பல திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.
இந்த பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டால், 2025 ஆம் ஆண்டில் சிலோன் டொபாக்கோ கம்பனியின் ரூ.53.9 பில்லியன் இலாபம் ரூ.17.3 பில்லியன் அளவிற்கு குறையும், அதேவேளை அரசின் வரி வருவாய் கணிசமாக அதிகரிக்கும் என ஆய்வு குறிப்பிடுகிறது.
கொள்கை வகுப்பாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் சிகரெட் வரி தொடர்பான வருவாய் இழப்புகளை நேரடியாக கண்காணிக்க இந்த Cigarette Tax Leakage Tracker பயன்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (Newswire)





