பஹ்ரைன் – பஹ்ரைனில் அமைந்துள்ள அமெரிக்க கடற்படையின் ஐந்தாவது கடற்படை (US Navy Fifth Fleet) தளத்தின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம், கடற்படை ஆதரவு நிர்வாக மையம், களஞ்சியங்கள் மற்றும் எரிபொருள் சேமிப்பு வசதிகள் உள்ளிட்ட பல முக்கிய இலக்குகள் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் அழிக்கப்பட்டுள்ளதாக ஈரான் புரட்சிகர காவல்படை (IRGC) தெரிவித்துள்ளது.
இது அமெரிக்காவுக்கு எதிரான “கடுமையான பதிலடி” எனக் குறிப்பிட்டுள்ள IRGC, மோதல் தொடர்ந்தால் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளுக்கான எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதி வழித்தடங்களும் இலக்காக மாற்றப்படலாம் என எச்சரித்துள்ளது.
ஈரானின் அரச ஊடகமான IRIB வெளியிட்ட அறிக்கையில், “இப்பிராந்தியத்தின் எரிசக்தி ஏற்றுமதி அனைவருக்கும் இருக்க வேண்டும்; இல்லையெனில் யாருக்கும் இருக்கக் கூடாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பிராந்திய கடல் போக்குவரத்து மற்றும் எரிசக்தி கட்டமைப்புகள் மீது மேலும் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அமெரிக்க இராணுவம், ஜூலை 14 ஆம் தேதி இரவு 10.00 மணி (EST) முதல் ஜூலை 15 அதிகாலை 2.00 மணி (GMT) வரை ஈரானுக்கு எதிராக மேலும் ஒரு சுற்று தாக்குதல்களை மேற்கொண்டதாக அறிவித்துள்ளது.
அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM) வெளியிட்ட தகவலின்படி, ஹோர்முஸ் நீரிணை மற்றும் ஈரான் கடலோரப் பகுதிகளில் உள்ள ஏவுகணை மற்றும் ட்ரோன் தளங்கள், கடற்படை வசதிகள் மற்றும் கடலோர பாதுகாப்பு அமைப்புகள் மீது போர் விமானங்கள், ட்ரோன்கள் மற்றும் கடற்படை கப்பல்கள் மூலம் துல்லியத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கையின் நோக்கம், வர்த்தகக் கப்பல்கள் மற்றும் பொதுமக்கள் பயணிக்கும் கடல் போக்குவரத்திற்கு அச்சுறுத்தலாக உள்ள ஈரானின் இராணுவ திறன்களை மேலும் பலவீனப்படுத்துவதாகும் என அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும், ஈரான் துறைமுகங்களுக்கு செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் கப்பல்களுக்கு எதிரான கடற்படை மறியல் நடவடிக்கையும் மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.





