அடுத்த 30 ஆண்டுகளுக்குப் பொருத்தமான கட்டுநாயக்க விமான நிலைய அபிவிருத்தி திட்டம்!

துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சின் 2026ஆம் ஆண்டின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகள் குறித்தான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் நேற்று (15) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சு மற்றும் அதன் கீழ் உள்ள இலங்கை துறைமுக அதிகார சபை, விமான நிலையங்கள் மற்றும் விமானச் சேவைகள் தனியார் நிறுவனம் (AASL), சிலோன் ஷிப்பிங் கோபரேஷன் (CSCL), ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் (SLA), ஸ்ரீலங்கன் கேடரிங், இலங்கை சிவில் விமானச் சேவைகள் அதிகார சபை, வணிக கப்பற்துறை செயலகம், இலங்கை துறைமுக முகாமைத்துவ மற்றும் ஆலோசனைச் சேவைகள் தனியார் நிறுவனம், ஜெயா கன்டேனர் டெர்மினல்ஸ் லிமிடெட் (JCT) ஆகிய நிறுவனங்களின் செயல்பாடுகள், 2026 வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் கீழ் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் 2027 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் குறித்து இந்த சந்திப்பின் போது விரிவாக ஆராயப்பட்டது.

இதன்போது உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் துறைமுக அதிகார சபையின் கீழ் செயல்படுத்தப்படும் இலங்கை துறைமுக அபிவிருத்தித் திட்டம், காங்கேசன்துறை துறைமுக மறுசீரமைப்பு உள்ளிட்ட அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றத்தை ஜனாதிபதி ஆராய்ந்தார். மேலும், கொழும்பு துறைமுக லொஜிஸ்டிக் பார்க் (Logistic Park), தெற்கு துறைமுகத்தின் அலைதடுப்புச் சுவர் விரிவாக்குதல் மற்றும் மேற்கு முனையத்தின் இரண்டாம் கட்டத்தை செயல்படுத்துதல், செயல்திறனை அதிகரிப்பதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் டிஜிட்டல் மயமாக்குதல் போன்ற விடயங்கள் குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

மேலும், 2055ஆம் ஆண்டளவில் வருடாந்த பயணிகள் கொள்ளளவை 24.2 மில்லியனாக உயர்த்துவதை இலக்காகக் கொண்டு, அடுத்த 30 ஆண்டுகளுக்குப் பொருந்தும் வகையில் 3 ஆண்டுகளில் நிறைவு செய்யப்படவுள்ள கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான அபிவிருத்தித் திட்டம் குறித்து அதிகாரிகள் ஜனாதிபதிக்கு விளக்கமளித்தனர்.

இதன்கீழ், 2027ஆம் ஆண்டிற்குள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய அபிவிருத்தித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் உள்ள வருகை மற்றும் புறப்பாடு முனையங்களை விரிவாக்குதல், புதிய முனையத்தை அமைத்தல் மற்றும் முனைய விரிவாக்கப் பணிகளை நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை ஒட்டிய பயணிகள் போக்குவரத்துச் சேவைகளை முறையாக மற்றும் செயற்திறன்மிக்கதாக மாற்ற வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார். மேலும், அனைத்து விமான நிலையச் சேவைகளையும் டிஜிட்டல் மயமாக்குவதற்காக டிஜிட்டல் அமைச்சுடன் இணைந்து கூட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இதன் போது சுட்டிக்காட்டப்பட்டது.

ஹிகுராக்கொட உள்ளிட்ட உள்நாட்டு விமான நிலையங்களின் தற்போதைய அபிவிருத்தி நிலைமைகள் குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், அந்த விமான நிலையங்களில் சிவில் பயணிகள் செயல்பாடுகளை மேற்கொள்ளும்போது விமானப்படையுடன் ஒருங்கிணைந்து மிகவும் திறமையான ஒரு பொறிமுறையைத் தயாரிக்குமாறும், ஒவ்வொரு விமான நிலையத்தின் தேவை குறித்து துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு மற்றும் இலங்கை விமானப்படை இணைந்து கூட்டு ஆய்வு ஒன்றை மேற்கொண்டு அது தொடர்பான மதிப்பீட்டு அறிக்கை ஒன்றைத் தயாரிக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை வழங்கினார்.

அத்தோடு, மத்தல விமான நிலையம் தற்போது ஒரு நாளைக்கு 6-7 மில்லியன் ரூபாய், அதாவது வருடத்திற்கு சுமார் 4 பில்லியன் ரூபாய் நட்டத்தை எதிர்கொண்டு வருவதாக இங்கு சுட்டிக்காட்டப்பட்டதுடன், இந்த நிலையைத் தவிர்ப்பதற்கான மாற்று முன்மொழிவுகள் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டன. இதன்கீழ், மத்தல விமான நிலையத்திற்கான முதலீட்டு முன்மொழிவுகள் தற்போது கோரப்பட்டுள்ளதாகவும், 2027ஆம் ஆண்டளவில் அது தொடர்பான பணிகளை நிறைவு செய்ய முடியும் என்றும் இதன் போது குறிப்பிடப்பட்டது.

இதேவேளை, யாழ்ப்பாண விமான நிலைய பயணிகள் முனையத்தை நவீனமயமாக்கி அதன் வசதிகளை மேம்படுத்தும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

நிறுவனங்கள் தங்களின் நிதி வலிமையைப் பயன்படுத்தி, எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களுக்குத் தேவையான நிதியை நிர்வகித்து , மக்களின் வரிப் பணத்திற்குச் சுமையாக அமையாத வகையில் திறைசேரிக்கு அதிகபட்ச பங்களிப்பை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி இங்கு மேலும் சுட்டிக்காட்டினார்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore