ஹோமாகம, பிடிப்பனை பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய, ஆப் (App) ஊடாக பகுதி நேர வாடகை மோட்டார் சைக்கிள் சேவையில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் நேற்று (16) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பொலிஸாரின் தகவலின்படி, குறித்த நபர் ஜூலை 15 ஆம் திகதி மாலை சுமார் 7.00 மணியளவில் பயணியொருவரை அழைத்துச் செல்வதற்காக வீட்டை விட்டு புறப்பட்டுள்ளார்.
அடுத்த நாள் காலை அவரது சடலம் மீட்கப்பட்டதுடன், பிரேத பரிசோதனையில் கழுத்து அறுக்கப்பட்டதால் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தக் கொலை அருகிலுள்ள ஏல நிலப்பகுதியில் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவத்திற்குப் பின்னர் மர்மநபர்கள்,
மோட்டார் சைக்கிள்,
தங்கச் சங்கிலி,
கைப்பேசி,
பணப்பை ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவ இடத்திலிருந்து உயிரிழந்தவருக்குச் சொந்தமானதாக நம்பப்படும் ஒரு ஜோடி செருப்பு மற்றும் 20 ரூபாய் நோட்டொன்றும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
ஹோமாகம நீதவான் விசாரணை மற்றும் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையின் பின்னர், இது திட்டமிட்ட கொலை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், அவர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை ஹோமாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





