அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவரும் உடன்பாட்டிற்கு எதிராக, இஸ்ரேல் அரசாங்கத்தின் சில தரப்பினர் அமெரிக்க மக்களின் கருத்தை மாற்ற முயற்சித்ததாக அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் (JD Vance) குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்க போட்காஸ்டர் ஜோ ரோகனுடன் இடம்பெற்ற நேர்காணலில் கருத்து தெரிவித்த வான்ஸ், ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா கடந்த மாதம் எட்டிய உடன்பாட்டை ஆதரிப்பதாக தெரிவித்தார்.
“இஸ்ரேல் அரசாங்கத்துக்குள் உள்ள சிலர், இந்தக் கொள்கையிலிருந்து எங்களை விலக்க முயற்சித்தனர் என்பதை நான் உறுதியாக அறிவேன். அவர்கள் இராணுவ நடவடிக்கையை தொடர விரும்புகின்றனர்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தாம் முன்னெடுத்த பேச்சுவார்த்தை முயற்சியை தோல்வியடையச் செய்வதற்காக வெளிநாட்டு செல்வாக்கு பிரசாரம் ஒன்று முன்னெடுக்கப்பட்டதாகவும் வான்ஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் ஈரான் தொடர்பான கொள்கையில் செல்வாக்கு செலுத்தும் நோக்கில் நிதியுதவி செய்யப்பட்ட டிஜிட்டல் பிரசாரம் ஒன்று நடத்தப்பட்டதாக Time Magazine வெளியிட்ட செய்தியை மேற்கோள்காட்டிய அவர், இந்த நடவடிக்கைகள் பேச்சுவார்த்தையை பாதிக்க முயன்றதாக கூறினார்.
அமெரிக்க துணை ஜனாதிபதியின் கருத்துகள் தொடர்பாக கருத்து தெரிவித்த அல் ஜசீரா செய்தியாளர் பட்டி கல்ஹேன், இந்த செல்வாக்கு பிரசாரம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்களான MAGA குழுவினரை இலக்காகக் கொண்டிருக்கலாம் என தெரிவித்துள்ளார்.
வான்ஸ் மேலும், இஸ்ரேல் உள்ளிட்ட நட்பு நாடுகளும் எதிரி நாடுகளும் அமெரிக்க கொள்கைகளில் செல்வாக்கு செலுத்த முயற்சிப்பது வழக்கமானது என்றாலும், அந்த நடவடிக்கைகள் அமெரிக்க அரசியல் முடிவுகளை பாதிக்கும் போது தான் பிரச்சினையாகிறது என கூறினார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான இடைக்கால சமாதான உடன்பாடு கடந்த மாதம் எட்டப்பட்டிருந்த போதிலும், சமீபத்திய பதற்றமான இராணுவ நடவடிக்கைகளால் அந்த உடன்பாடு சவாலுக்கு உள்ளாகியுள்ளது.
இதுகுறித்து முன்னாள் இஸ்ரேல் தூதர் அலோன் பிங்காஸ் கருத்து தெரிவிக்கையில், அமெரிக்க துணை ஜனாதிபதி ஒருவர் இஸ்ரேல் மீது இவ்வாறு வெளிப்படையாக குற்றச்சாட்டு முன்வைப்பது முன்னெப்போதும் இல்லாத ஒன்று என்றும், இது இரு நாடுகளுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் அரசாங்கம் இதுவரை வான்ஸின் கருத்துகளுக்கு உத்தியோகபூர்வ பதில் எதுவும் வழங்கவில்லை.





