இலங்கை பணிபுரியும் ஊடகவியலாளர் சங்கம் (SLWJA), The Morning இணையதளத்தின் ஆசிரியர் லஹிரு டொலோஸ்வல மற்றும் அவரது குடும்பத்தினர் மீது இராணுவம் மற்றும் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் அச்சுறுத்தல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க உடனடியாக தலையிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த ஜூலை 15 ஆம் திகதி, மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்த லஹிரு டொலோஸ்வலாவின் வாகனம், இராணுவத் தளபதியின் பாதுகாப்பு அணிக்குச் சொந்தமான Land Cruiser வாகனத்துடன் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தை காணொளியாக பதிவு செய்ய முயன்றபோது, இராணுவ கமாண்டோ அதிகாரி ஒருவர் மிரட்டி பதிவு செய்ய வேண்டாம் எனக் கூறியதாகவும், இதனால் குடும்பத்தினர் கடும் மனஉளைச்சலுக்கு ஆளானதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யச் சென்றபோது சுமார் 30 இராணுவத்தினர் அங்கு வந்து முறைப்பாடு செய்வதைத் தடுத்ததாகவும், பின்னர் பதிவு செய்யப்பட்ட வாக்குமூலம் அழுத்தத்தின் கீழ் மாற்றப்பட்டதுடன், அவரது கைப்பேசியில் இருந்த விபத்து காணொளியும் வலுக்கட்டாயமாக அழிக்கப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் சட்டத்தின் ஆட்சிக்கும் ஊடக சுதந்திரத்திற்கும் கடும் அச்சுறுத்தலாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள SLWJA, சம்பந்தப்பட்ட இராணுவ அதிகாரிகள் மீது உடனடி விசாரணை நடத்தி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறும், ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் ஜனாதிபதியிடம் கோரியுள்ளது.





