தெரு விலங்குகளின் உயிர் மற்றும் நலனை பாதுகாப்பது அனைத்து குடிமக்களினதும் பொறுப்பு என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெற்ற PET EXPO 2026 கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் பிரதமர் இதனை தெரிவித்தார். இந்நிகழ்வில் அவர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
விலங்கு நலன் தொடர்பான அமைச்சரவை பத்திரம் அண்மையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளமை, விலங்குகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் கொள்கைகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்பை உருவாக்கியுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.
மேலும், தெரு விலங்குகள் நலன் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் “அலோகா” கண்காட்சி கூடத்தையும் பிரதமர் பார்வையிட்டார். இதன்போது மீட்கப்பட்ட தெரு நாய்க்குட்டி ஒன்றை புதிய உரிமையாளரிடம் ஒப்படைக்கும் நிகழ்விலும் அவர் பங்கேற்றார்.
இலங்கையில் கால்நடை மருத்துவ சேவைகள் எதிர்காலத்தை நோக்கிய தெளிவான பார்வையுடன் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருவதாக தெரிவித்த பிரதமர், நாய்க்குட்டிகள் மற்றும் பூனைக்குட்டிகளை கோவில்கள் உள்ளிட்ட பொது இடங்களில் கைவிடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகளுக்கு இடையிலான உறவு, கருணை, அன்பு மற்றும் இரக்க உணர்வுகளை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார். (Newswire)





