அமெரிக்கா – ஈரான் இடையிலான சமீபத்திய மோதல் காரணமாக பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழ்நிலையிலும், ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய விமான நிறுவனங்கள் தங்களது பெரும்பாலான சர்வதேச விமான சேவைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றன.
Emirates, Etihad Airways, flydubai மற்றும் Air Arabia ஆகிய விமான நிறுவனங்கள் வழமையான சேவைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், பாதுகாப்பு காரணங்களால் சில சர்வதேச விமான நிறுவனங்கள் துபாய் மற்றும் அபுதாபிக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளன. சில விமானங்களின் பயண அட்டவணைகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
ஐரோப்பிய ஒன்றிய விமானப் பாதுகாப்பு நிறுவனம் (EASA) வளைகுடா வான்வெளியின் சில பகுதிகளில் பாதுகாப்பு அபாயங்கள் காணப்படுவதாக எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், விமான நிறுவனங்கள் பாதுகாப்பு மதிப்பீடுகளின் அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இதனால், பயணிகள் தங்களது விமான சேவைகளின் தற்போதைய நிலை மற்றும் பயண நேர மாற்றங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களிடம் உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.





