2026 FIFA உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணியின் தலைவர் லியோனல் மெஸ்ஸியும், ஸ்பெயின் இளம் நட்சத்திர வீரர் லமீன் யமாலும் நேருக்கு நேர் மோதவுள்ள நிலையில், இருவரையும் இணைக்கும் பழைய புகைப்படம் மீண்டும் கவனம் பெற்றுள்ளது.
2007ஆம் ஆண்டு பார்சிலோனாவின் காம்ப் நௌ மைதான உடைமாற்றும் அறையில் எடுக்கப்பட்ட அந்த புகைப்படத்தில், அப்போது 20 வயதான மெஸ்ஸி, 5 மாத குழந்தையாக இருந்த லமீன் யமாலை கையில் வைத்திருந்தார்.
இந்த புகைப்படம் தொடர்பாக கருத்து தெரிவித்த மெஸ்ஸி, “இந்த புகைப்படம் நம்ப முடியாத ஒன்று. இப்போது இருவரும் உலகக் கிண்ணத்தில் எதிரெதிராக விளையாடுவது ஆச்சரியமான விடயம்” என தெரிவித்துள்ளார்.
மேலும், 19 வயதான லமீன் யமால் தற்போது உலகின் சிறந்த வீரர்களில் ஒருவராக இருப்பதாக மெஸ்ஸி பாராட்டியுள்ளார்.
“அவர் மிகச் சிறந்த வீரர் மற்றும் உலகளாவிய நட்சத்திரம். அவருக்கு நீண்ட எதிர்காலம் உள்ளது. ஆனால் இம்முறை அவர் சாம்பியன் ஆகாமல் இருக்க நாங்கள் முழு முயற்சியையும் மேற்கொள்வோம்” என மெஸ்ஸி குறிப்பிட்டுள்ளார்.
பார்சிலோனாவின் புகழ்பெற்ற 10ஆம் இலக்க சட்டையை மெஸ்ஸியிடம் இருந்து பெற்றுள்ள லமீன் யமால், ஸ்பெயின் அணிக்காக யூரோ 2024 கிண்ணத்தை வென்றதுடன், ஒரே வீரராக யூரோ மற்றும் FIFA உலகக் கிண்ணத்தை வெல்லும் இளம் வீரர் என்ற சாதனையை நோக்கி பயணிக்கிறார்.
அர்ஜென்டினா – ஸ்பெயின் அணிகளுக்கு இடையிலான 2026 FIFA உலகக் கிண்ண இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.





