இலங்கையின் முதியோர் மக்கள் தொகையில் சுமார் 10 சதவீதமானோர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சிறுநீரக நோய் தொடர்பான விசேட நிபுணர் வைத்தியர் அனுபமா டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதுவரை கண்டறியப்படாத மற்றும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படாத மேலும் பல சிறுநீரக நோயாளர்கள் நாட்டில் இருக்கக்கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறுநீரக நோய்க்கான முக்கிய காரணியாக நீரிழிவு நோய் காணப்படுவதாக தெரிவித்த வைத்தியர், ஏனைய ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் அதிகளவிலான நீரிழிவு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் கூறினார்.
இலங்கையில் நீரிழிவு நோயின் தாக்கம் சுமார் 25 சதவீதமாக காணப்படுவதாகவும், நீரிழிவு நோயை முறையாக கட்டுப்படுத்தத் தவறுவதால் சிறுநீரக பாதிப்புகள் ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், உயர் குருதி அழுத்தம், இதய நோய்கள் மற்றும் உடலில் நச்சுத்தன்மை ஏற்படுதல் போன்ற நிலைகளும் சிறுநீரக நோய்க்கு காரணமாக அமையக்கூடும் என வைத்தியர் தெரிவித்தார்.
தற்போது காணப்படும் 10 சதவீத சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை எதிர்காலத்தில் 25 சதவீதம் வரை அதிகரிக்கலாம் எனவும், சில சந்தர்ப்பங்களில் அது 30 முதல் 40 சதவீதம் வரை உயரக்கூடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இளைஞர்களிடையேயும் சிறுநீரக பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்த வைத்தியர், உடற்கட்டமைப்பு (Bodybuilding) மற்றும் சருமத்தை வெண்மையாக்க பயன்படுத்தப்படும் சில மருந்துப் பொருட்களின் பயன்பாடும் இதற்கு காரணமாக இருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.





