நுவரெலியா | ஜூலை 19
இலங்கையின் மலைநாட்டு புகையிரதப் பாதையில் பயணித்த வெளிநாட்டு பெண் சுற்றுலாப் பயணி ஒருவர், செல்ஃபி எடுக்க முயன்றபோது ஓடிக்கொண்டிருந்த ரயிலிலிருந்து தவறி விழுந்து காயமடைந்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று (19) காலை அம்பேவெல பகுதியில் இடம்பெற்றுள்ளது.
நானுஓயா – பதுளை நோக்கிப் பயணித்த புகையிரதத்தில் பயணித்துக்கொண்டிருந்த குறித்த சுற்றுலாப் பயணி, செல்ஃபி எடுக்க முயன்றபோது ரயிலிலிருந்து கீழே விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்த அவர் உடனடியாக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மலைநாட்டு புகையிரதப் பாதையில் பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள், குறிப்பாக செல்ஃபி எடுப்பதற்காக ஓடும் ரயிலின் வெளியே சாய்வதையோ அல்லது ஆபத்தான முறையில் நிற்பதையோ தவிர்க்குமாறு அதிகாரிகள் மீண்டும் எச்சரித்துள்ளனர்.
இவ்வாறான செயல்கள் உயிரிழப்பு அல்லது பாரிய விபத்துகளுக்கு வழிவகுக்கக்கூடும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.





