அரசுக்கு எதிராகக் கருத்து தெரிவிக்கும் நபர்கள் அச்சுறுத்தல்களுக்கும் அழுத்தங்களுக்கும் உள்ளாக்கப்படுவதால், சிலர் தற்கொலை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார்.
கேகாலை மாவட்டத்தின் டெடிகம பகுதியில் நேற்று (18) நடைபெற்ற பிரதேசக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், அரசுக்கு எதிராக வாக்குமூலம் வழங்குபவர்கள் விசாரணைகளின் போது மிரட்டப்படுவதாகவும் தெரிவித்தார்.
“இது தற்கொலைகள் அதிகளவில் இடம்பெறும் காலமாகத் தெரிகிறது. அரசுக்கு எதிராகப் பேசிய சிலர் தற்கொலை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மேலும், விசாரணைகளின் போது ‘உங்களுக்கும் அதே நிலை ஏற்படலாம்’ என எச்சரிக்கப்படுவதாக தகவல்கள் கிடைக்கின்றன,” என அவர் கூறினார்.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் சுயாதீனமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், அரசை விமர்சிப்பவர்களை அச்சுறுத்தி அடக்கும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன என்றும் நாமல் ராஜபக்ஷ குற்றம்சாட்டினார்.
மேலும், அரசின் பொருளாதாரக் கொள்கைகள், புதிய வரி விதிப்புகள், அரச ஊழியர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும் அணுகுமுறை ஆகியவற்றையும் அவர் விமர்சித்தார்.
அத்துடன், மக்களுக்கு வழங்கிய பல தேர்தல் வாக்குறுதிகளை தற்போதைய அரசு நிறைவேற்றத் தவறிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.





