மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்ற நிலை காரணமாக உலகளாவிய எண்ணெய் விலைகள் திங்கட்கிழமை (ஜூலை 20) ஆசிய வர்த்தகத்தில் கணிசமாக உயர்ந்துள்ளன.
அமெரிக்கா தொடர்ந்து ஒன்பதாவது இரவும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் ஒன்று தீப்பற்றிய சம்பவமும் எண்ணெய் சந்தையில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் முக்கியமான எரிசக்தி போக்குவரத்து பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் காரணமாக விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
பிரெண்ட் கச்சா எண்ணெய் செப்டம்பர் விநியோகத்திற்காக 2.72 சதவீதம் உயர்ந்து ஒரு பீப்பாய்க்கு 90.50 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. இது சில நேரங்களில் 91 டொலரைத் தாண்டியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவின் WTI கச்சா எண்ணெய் விலையும் 2.39 சதவீதம் உயர்ந்து 84.46 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், பிரித்தானிய கடல்சார் பாதுகாப்பு அமைப்பு (UKMTO), ஓமானுக்கு வடமேற்கில் சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடற்பகுதியில் ஒரு கப்பல் தீப்பற்றியதாக அறிவித்துள்ளது. எனினும் தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரிவிக்கப்படவில்லை.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், மத்திய கிழக்கில் அமெரிக்க இராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவங்களுக்கு பதிலடியாக ஈரான் மீது கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், குவைத் இராணுவம் தமது நாட்டை இலக்காகக் கொண்ட ஈரானிய ட்ரோன் தாக்குதலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருவதாக அறிவித்துள்ளது.





