முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, நிலம் கொள்வனவு தொடர்பான வழக்கில் இரண்டாவது முறையாகவும் நீதிமன்றில் ஆஜராகாததால், அவருக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்டிருந்த கைது வாரண்டை மாத்தறை பிரதம நீதவான் சதுர திஸாநாயக்க இன்று (21) மீண்டும் நீடித்துள்ளார்.
மாத்தறை எலியகந்த வீதியின் பிரவுன்ஸ் ஹில் பகுதியில் அமைந்துள்ள சுமார் ஒன்றரை ஏக்கர் பரப்பளவுடைய, ரூ. 6 கோடி மதிப்புள்ள தென்னைத் தோட்டம் ஒன்றை கொள்வனவு செய்தமை தொடர்பிலேயே இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
பசில் ராஜபக்ச தொடர்ச்சியாக நீதிமன்றில் ஆஜராகாததை அடுத்து, அவரை கைது செய்வதற்கான வாரண்டை நீதிமன்றம் நீடித்துள்ளது.
மேலும், முன்னாள் அமைச்சருக்காக பிணை வழங்கியிருந்த நால்வருக்கும் நீதவான் கடும் எச்சரிக்கை விடுத்து, அடுத்த விசாரணை தினத்தில் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
அவ்வாறு ஆஜர்படுத்தத் தவறினால், பிணைப்பணத்தை ஏன் அரசுடமையாக்கக் கூடாது என்பதற்கான காரணத்தை நீதிமன்றில் விளக்குமாறும் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. (Newswire)





