யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா நீதிமன்றத்தில் ஆஜராகாததைத் தொடர்ந்து அவருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் பாராளுமன்ற சிறப்புரிமை தொடர்பான சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம், பொலிஸ் கடமைகளுக்கு இடையூறு செய்ததாக கூறப்படும் வழக்கு தொடர்பில் ஆஜராக தவறியதன் காரணமாக வெள்ளிக்கிழமை (24) MP அர்ச்சுனாவுக்கு கைது வாரண்ட் பிறப்பித்தது.
எனினும், குறித்த நேரத்தில் அவர் பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை பாராளுமன்றத்தில் எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சபை நடவடிக்கைகளில் பங்கேற்பது அவரது அடிப்படை உரிமை என தெரிவித்தார்.
“MP அர்ச்சுனாவின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது. அவரது உரிமைகளை பாதுகாப்பது சபாநாயகரின் பொறுப்பாகும்” என சஜித் பிரேமதாச கூறியதுடன், இது தனிப்பட்ட உறுப்பினரின் பிரச்சினை மட்டுமல்ல, பாராளுமன்றத்தின் சிறப்புரிமை தொடர்பான விடயம் என்றும் குறிப்பிட்டார்.
இந்த விவகாரம் தொடர்பில் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன உடனடி தீர்மானம் எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
கைது வாரண்ட் தொடர்பான வழக்கு, பொலிஸ் கடமைகளுக்கு இடையூறு செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.





