கொழும்பு துறைமுக நகரமான Port City குடியிருப்பாளர்களுக்கு உள்ளூராட்சி தேர்தல்களில் வாக்களிக்க முடியாத நிலை காணப்படுவது, அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறும் விடயமாக இருக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.
உள்கட்டமைப்பு மற்றும் மூலோபாய அபிவிருத்தி தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவரான மரிக்கார், அதிகாரிகளுடனான அண்மைய கலந்துரையாடலின்போது இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
Port City குடியிருப்பாளர்கள் கொழும்பு மாவட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், உள்ளூராட்சி தேர்தல்களில் வாக்களிப்பதற்கான வாய்ப்பு அவர்களுக்கு இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
«“ஜனாதிபதி அல்லது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றால், அவர்கள் கொழும்பு மாவட்டத்தின் கீழ் வாக்களிக்க முடியும். ஆனால் உள்ளூராட்சி தேர்தலில் அவர்களுக்கு வாக்களிக்க இடமில்லை. இது அவர்களின் அடிப்படை உரிமையை மீறும் விடயம்.”»
எனவே, Port City-க்கென தனியான உள்ளூராட்சி அமைப்பொன்றை உருவாக்க வேண்டிய தேவை ஏற்படலாம் எனவும் மரிக்கார் தெரிவித்துள்ளார்.
📌 அதிகாரிகளின் விளக்கம்
எவ்வாறாயினும், 1995 ஆம் ஆண்டின் நிர்வாக மாவட்டங்கள் சட்டத்தின் கீழ், 2019 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மூலம் Port City நிலப்பரப்பு ஏற்கனவே கொழும்பு நிர்வாக மாவட்டத்திற்குள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் மாவட்ட மட்ட பிரதிநிதித்துவம் தொடர்பான பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.
ஆனால், மாவட்ட தேர்தல்களில் பிரதிநிதித்துவம் வழங்கப்படுவது மட்டுமே போதுமானதல்ல என்றும், உள்ளூராட்சி மட்ட பிரதிநிதித்துவம் தொடர்பான பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை என்றும் மரிக்கார் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டால், அது Port City திட்டத்தின் முன்னேற்றத்தை தாமதப்படுத்தக்கூடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.





