கடந்த வாரம் தாய்லாந்தின் Phuket நகரிலிருந்து டெல்லி நோக்கி சென்ற Air India விமானம் கடுமையான காற்றுக் கொந்தளிப்பில் சிக்கிய சம்பவத்தைத் தொடர்ந்து, விமானத்தை இயக்கிய பிரதான விமானிக்கு மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் பரிசோதனையில் ஆரம்பகட்டமாக Positive எனக் காட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், இது இறுதி முடிவு அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது. உறுதிப்படுத்தும் பரிசோதனைக்காக மாதிரிகள் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், அதன் இறுதி அறிக்கை இன்னும் வெளியாகவில்லை.
சம்பவத்துக்குப் பின்னர் நடத்தப்பட்ட பரிசோதனையில், விமானியின் முடிவு மேலதிக உறுதிப்படுத்தல் பரிசோதனை தேவைப்படும் வகையில் இருந்ததாக இந்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, விசாரணை நிறைவடையும் வரை விமானத்தின் இரு விமானிகளும் பணிப்பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
Air India நிறுவனம், பரிசோதனை முடிவுகள் தமக்கு அதிகாரப்பூர்வமாக வழங்கப்படாததால், இதுகுறித்து உறுதிப்படுத்தவோ மறுக்கவோ முடியாது என தெரிவித்துள்ளது.
🛫 விமானத்தில் என்ன நடந்தது?
ஆகஸ்ட் 4 ஆம் திகதி AI2379 விமானம் Phuket இலிருந்து டெல்லி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தபோது கடுமையான காற்றுக் கொந்தளிப்பை எதிர்கொண்டது.
137 பயணிகள் மற்றும் 8 பணியாளர்களுடன் பயணித்த அந்த விமானம், நடுவானில் திடீரென சுமார் 300 அடி உயரத்தை இழந்ததாக இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் குறைந்தது 13 பயணிகளும் 4 விமானப் பணியாளர்களும் காயமடைந்தனர். அவர்களில் இரு பணியாளர்களுக்கு முதுகெலும்பு மற்றும் கழுத்துப் பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் விசாரணையை ஆரம்பித்துள்ளதுடன், விமானத்தின் Flight Data Recorder மற்றும் Cockpit Voice Recorder ஆகியவையும் மேலதிக விசாரணைக்காக பாதுகாப்பாக கைப்பற்றப்பட்டுள்ளன.
விமானிக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் இறுதி உறுதிப்படுத்தல் அறிக்கை வெளியான பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
— TREND செய்திகள்





