பொது போக்குவரத்து சேவைகளின் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தும் நோக்கில், சுகாதார அமைச்சினால் முழுமையான வசதிகளுடன் கூடிய புதிய நடமாடும் போதைப்பொருள் பரிசோதனை பேருந்து, தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.
PZA – 0040 என்ற இலக்கத்தைக் கொண்ட இந்த பேருந்தை சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அவர்கள், தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் கிளிஃபோர்ட் பெரேரா அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
தேசிய வீதி பாதுகாப்பு வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் இந்தத் திட்டத்தின் மூலம், பணியில் இருக்கும் பொது போக்குவரத்து சாரதிகள், நடத்துநர்கள் மற்றும் உதவியாளர்களிடம் போதைப்பொருள் பாவனை தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தற்போது இந்த நடமாடும் பரிசோதனைத் திட்டம் ஐந்து மாகாணங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், தேவையான வளங்கள் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருவதையடுத்து ஏனைய மாகாணங்களுக்கும் திட்டத்தை விரிவுபடுத்த எதிர்பார்க்கப்படுகின்றது.
தேசிய ரீதியில் முன்னெடுக்கப்படும் தற்செயல் போதைப்பொருள் பரிசோதனைத் திட்டத்தின் கீழ் இதுவரை 7,150 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வீதி விபத்துக்களை குறைத்து, உயிர்கள் மற்றும் சொத்துக்களை பாதுகாக்கும் நோக்கில் குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால நடவடிக்கைகள் அமைச்சுகளுக்கிடையிலான ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.





