மகாத்மா காந்தி, இலங்கையின் முன்னோடி கட்டிடக் கலைஞர் மின்னெட் டி சில்வா மற்றும் காந்தியின் 1927ஆம் ஆண்டு இலங்கை விஜயத்துடன் தொடர்புடைய அரிதாக அறியப்பட்ட ஒரு சம்பவத்தை சித்தரிக்கும் ஓவியம், புதுடெல்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.
“Gandhi and Minnette de Silva (2023)” என பெயரிடப்பட்ட இந்த ஓவியம், இலங்கை ஓவியர் ராஜா சேகர் மற்றும் பெங்களூரைச் சேர்ந்த Tapobhumi – Oko Centre for the Arts நிறுவனத்தின் Founder-Director நமிதா சுவாமி ஆகியோரால் கடந்த ஆகஸ்ட் 7ஆம் திகதி வழங்கப்பட்டது.
வரலாற்றாசிரியரும் பெண்ணிய ஆய்வாளருமான குமாரி ஜெயவர்தனவின் பதிவுகளின்படி, காந்தி இலங்கைக்கு விஜயம் செய்திருந்தபோது, அப்போது ஒன்பது வயதான மின்னெட் டி சில்வாவிடம் காந்திக்காக ஆட்டுப்பால் பெற்றுக்கொண்டு வருமாறு பொறுப்பு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தை ராஜா சேகர் தனது தனித்துவமான “Refractive” கலைப் பாணியில் மீளுருவாக்கியுள்ளார். இதில் காந்தி, சிறுமியான மின்னெட் டி சில்வா மற்றும் ஆடு ஆகியவை பல்வேறு வடிவியல் அமைப்புகள் மற்றும் பிரகாசமான நிறங்களுடன் கூடிய காட்சியில் சித்தரிக்கப்பட்டுள்ளன.
முதன்மை சம்பவத்தில் ஒரு சிறிய பகுதியாக இருந்த ஆடு, ஓவியத்தில் குறியீட்டு முக்கியத்துவம் பெற்றுள்ளதுடன், காந்தியின் எளிமை குறித்த தத்துவத்தையும் இலங்கையின் கிராமிய நிலப்பரப்பையும் இணைக்கும் அடையாளமாக இடம்பெற்றுள்ளது.
மின்னெட் டி சில்வா வடிவமைத்த வீட்டில் தான் வசித்திருந்ததாகவும், இதனால் இந்த ஓவியத்துடன் தனிப்பட்ட தொடர்பு ஏற்பட்டதாகவும் ஓவியர் ராஜா சேகர் தெரிவித்துள்ளார்.
இந்த ஓவியம் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் கலைத் தொகுப்பில் இணைக்கப்படுவதுடன், இலங்கை – இந்தியாவுக்கிடையிலான கலாசார, வரலாற்று மற்றும் மக்கள் தொடர்புகளை கொண்டாடுவதற்கும் பங்களிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





