மக்களின் சுகாதார சேவையை வலுப்படுத்தும் மற்றுமொரு முக்கிய நடவடிக்கையாக, காரைதீவு மற்றும் சம்மாந்துறை பிரதேசங்களில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள புதிய ஆயுர்வேத சிகிச்சை நிலையங்கள் இன்று (12.08.2026) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டன.
அரசாங்கத்தின் “அனைவருக்கும் ஆரோக்கியம்” என்ற நோக்கத்தையும், நாட்டின் பாரம்பரிய மருத்துவத் துறையை மேலும் வலுப்படுத்தும் திட்டத்தையும் அடிப்படையாகக் கொண்டு இச்சிகிச்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

புதிய நிலையங்கள் மூலம் காரைதீவு மற்றும் சம்மாந்துறை உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தமது பகுதிகளிலேயே தகுதிவாய்ந்த ஆயுர்வேத வைத்தியர்களின் மருத்துவ ஆலோசனைகள், சிகிச்சைகள் மற்றும் தேவையான மருந்துகளை பெற்றுக்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, பொதுமக்கள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய அவசியத்தை குறைத்து, தரமான பாரம்பரிய மருத்துவ சேவைகளை மக்களுக்கு இலகுவாகவும் அண்மையாகவும் வழங்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகர மற்றும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களின் அபிவிருத்தி ஒருங்கிணைப்புத் தலைவருமான அபூபக்கர் ஆதம்பாவா உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
அதிதிகளால் புதிய ஆயுர்வேத சிகிச்சை நிலையங்கள் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டதுடன், மக்களுக்கான மருத்துவ சேவைகளும் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

பாரம்பரிய மருத்துவத்தின் பயன்களை நவீன வசதிகளுடன் மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ள இத்திட்டம், காரைதீவு மற்றும் சம்மாந்துறை பிரதேச மக்களின் சுகாதார நலனில் முக்கிய பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.






