ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ‘பாகோ சமன்’ என்பவரின் தாயார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில், துப்பாக்கிதாரிகள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
உருபொக்க பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், உருபொக்க – மாத்தறை வீதியில் தம்பஹல பொல்வத்த பகுதியில், பாலம் ஒன்றிற்கு அருகிலுள்ள தேயிலைத் தோட்டத்தில் கைவிடப்பட்ட நிலையில் குறித்த மோட்டார் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விசாரணைகளின்படி, செவ்வாய்க்கிழமை (12) மாலை மிடிதெனிய, உலஹிட்டிய பகுதியில் உள்ள வீடொன்றுக்கு அடையாளம் தெரியாத இருவர் மோட்டார் சைக்கிளில் சென்று துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ‘பாகோ சமன்’ என்பவரின் தாயார் மிடிதெனிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்தத் தாக்குதலுக்கு கைத்துப்பாக்கி வகையான துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவத்திற்கான காரணம் இதுவரை தெளிவாக தெரியவராத நிலையில், கொலை தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.





