சிறுவர் தொழிலாளர் சட்ட மீறல்களுக்கு அபராதம் ரூ.10,000 இலிருந்து ரூ.100,000 ஆக அதிகரிப்பு

சிறுவர்களை சட்டவிரோதமாக தொழிலில் ஈடுபடுத்துவது தொடர்பான குற்றங்களுக்கு விதிக்கப்படும் குறைந்தபட்ச அபராதத்தை ரூ.10,000 இலிருந்து ரூ.100,000 ஆக அதிகரிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ள சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் தொழிலில் ஈடுபடுதல் தொடர்பான (திருத்த) சட்டமூலம் எதிர்வரும் ஆகஸ்ட் 20ஆம் திகதி பாராளுமன்றத்தில் இரண்டாம் வாசிப்புக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

1956ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ் தற்போதுள்ள அபராதத் தொகை, சட்ட மீறல்களைத் தடுப்பதற்கு போதுமானதாக இல்லை என தொழில் அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சட்டத்தின் பிரகாரம், 16 வயதுக்குக் குறைவான சிறுவர்களை தொழிலில் ஈடுபடுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளதுடன், 16 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களின் தொழில் நடவடிக்கைகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, அவர்களின் உடல்நலம், பாதுகாப்பு அல்லது ஒழுக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான தொழில்களில் ஈடுபடுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது.

2003ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின் பிரகாரம், நீதிமன்றத்தினால் ரூ.10,000 வரை அபராதம், 12 மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும், பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு இழப்பீட்டுடன் விதிக்க முடியும்.

தற்போது முன்மொழியப்பட்டுள்ள திருத்தத்தின் மூலம், சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் விதிக்கப்படும் குறைந்தபட்ச அபராதத் தொகை ரூ.100,000 ஆக உயர்த்தப்படவுள்ளது.

கல்வி, மனிதவளம் மற்றும் மனித மூலதனம் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவினால் இந்த சட்டமூலம் அண்மையில் பரிசீலிக்கப்பட்டதுடன், குழுவினால் அதற்கு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

சிறுவர் தொழிலாளர் முறையைத் தடுப்பதற்கும், இலங்கையின் சட்டங்களை சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) தரநிலைகளுடன் இணங்கச் செய்வதற்கும் இந்த திருத்தம் அவசியமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore