கடந்த மாதம் ரயன்ஏயார் விமானத்தில் இடம்பெற்ற சம்பவத்தில், இயந்திரத்தின் விசிறி பிளேடு உடைந்து அதன் பாகங்கள் விமானத்தின் ஜன்னலைத் தாக்கியதால், பயணி ஒருவர் ஜன்னல் வழியாக பகுதியளவில் வெளியே இழுக்கப்பட்டதாக அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு சபை (NTSB) தெரிவித்துள்ளது.
முதற்கட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில், உடைந்த இயந்திர விசிறி பிளேட்டின் சுமார் 37 சதவீதப் பகுதியில் உலோகச் சோர்வுக்கான (Metal Fatigue) அறிகுறிகள் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 10ஆம் திகதி, கிரேக்கத்தின் தெசலோனிகியில் இருந்து ஜெர்மனியின் மெம்மிங்கன் நோக்கி பயணித்த Boeing 737-800 விமானத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த விமானம் ரயன்ஏயார் நிறுவனத்தின் துணை நிறுவனமான Malta Air நிறுவனத்தால் இயக்கப்பட்டது.
விமானம் சுமார் 16,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது, வலது இயந்திரத்தில் அதிக அதிர்வு ஏற்பட்டதாக விமானிகளுக்கு எச்சரிக்கை கிடைத்துள்ளது. அதிர்வு வேகமாக அதிகரித்ததைத் தொடர்ந்து பெரும் சத்தம் கேட்டதுடன், விமானத்தின் அழுத்தமும் திடீரென குறைந்துள்ளது.
இயந்திரத்திலிருந்து உடைந்த பாகங்கள் விமானத்தின் உடற்பகுதியைத் தாக்கி, 11ஆம் வரிசையில் இருந்த ஜன்னலை உடைத்து, விமானத்திற்குள் புகுந்துள்ளன.
இதன்போது, 11F இருக்கையில் அமர்ந்திருந்த 61 வயதுடைய பயணி ஒருவர் உடைந்த ஜன்னல் வழியாக பகுதியளவில் வெளியே இழுக்கப்பட்டுள்ளார். அருகிலிருந்த பயணிகள் அவரை மீண்டும் விமானத்திற்குள் இழுத்துள்ளனர்.
அவருக்கு கழுத்து மற்றும் தோள்பட்டை பகுதியில் காயங்களும் உராய்வுக் காயங்களும் ஏற்பட்டுள்ளன. விமானத்தில் இருந்த மருத்துவர் அவருக்கு ஆரம்ப சிகிச்சை வழங்கியதுடன், விமானம் மீண்டும் தெசலோனிகிக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், இயந்திரத்தின் பல பகுதிகளில் பறவைகளின் இறகுகள் மற்றும் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள போதிலும், பறவை மோதலே விசிறி பிளேடு உடைந்ததற்கான காரணம் என இதுவரை NTSB உறுதிப்படுத்தவில்லை.
குறித்த இயந்திரம் கடந்த ஒரு வருடத்தில் நான்கு பறவை மோதல் சம்பவங்களுக்கு உள்ளாகியிருந்ததாகவும், அவற்றில் இரண்டு சம்பவங்களில் பறவை எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பராமரிப்பு பதிவுகள் தெரிவிக்கின்றன.
மேலும், இயந்திரத்தின் விசிறி பிளேட்களுக்கு 2025 நவம்பர் மற்றும் 2026 மே மாதங்களில் அல்ட்ராசோனிக் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும், அப்போது எந்தவித சேதமும் கண்டறியப்படவில்லை.
சம்பவத்திற்கான முழுமையான காரணத்தை கண்டறியும் விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.





