தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குப் பின்னர் மாணவர்களின் கருத்துக்களைப் பதிவு செய்து, பெற்றோர் அல்லது ஆசிரியர்களின் அனுமதியின்றி வெளியிடுவதைத் தவிர்க்குமாறு ஊடக நிறுவனங்களுக்கு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைக்குப் பின்னர் சில மாணவர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்துக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு, அவர்களை கேலிக்கும் விமர்சனத்திற்கும் உள்ளாக்கிய சம்பவங்கள் தொடர்பில் கிடைத்த முறைப்பாடுகளைத் தொடர்ந்து இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மாணவர்கள் தெரிவித்த கருத்துக்கள் சமூக ஊடகங்களில் கேலிக்குரிய வகையில் பகிரப்பட்ட சம்பவங்களை கல்வி அமைச்சு அவதானித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதன்படி, பெற்றோர், பாதுகாவலர் அல்லது ஆசிரியரின் அனுமதியின்றி சிறுவர்களிடமிருந்து கருத்துக்களைப் பெறுதல், பதிவு செய்தல் அல்லது ஒளிபரப்புதல் கூடாது என ஊடக நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், சிறுவர்களை உள்ளடக்கிய இவ்வாறான காணொளிகளை சமூக ஊடகங்களில் வெளியிடும் ஊடக நிறுவனங்கள் மற்றும் தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் எனவும் கல்வி அமைச்சு எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Newswire)





