கொழும்பு, ஆகஸ்ட் 19: நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக பல மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு விவசாயக் காப்புறுதி இழப்பீட்டை துரிதமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் விவசாயிகள் காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.
நீர் பற்றாக்குறை காரணமாக மொனராகலை, பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை, அம்பாறை மற்றும் அனுராதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நெல் மற்றும் சோளம் உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதுவரை சுமார் 4,707 விவசாயிகளுக்குச் சொந்தமான 6,073 ஏக்கர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாக,
🔹 மொனராகலை – 960 விவசாயிகள் / 1,334 ஏக்கர்
🔹 பொலன்னறுவை – 560 விவசாயிகள் / 1,100 ஏக்கர்
🔹 ஹம்பாந்தோட்டை – 782 விவசாயிகள் / 435 ஏக்கர்
🔹 அம்பாறை – 505 விவசாயிகள் / 1,004 ஏக்கர்
🔹 அனுராதபுரம் – 1,900 விவசாயிகள் / 2,200 ஏக்கர்
நெல் உள்ளிட்ட ஆறு வகையான பயிர்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு அதிகபட்சம் ரூ.100,000 வரை இழப்பீடு வழங்கப்படவுள்ளதுடன், அதிகபட்சமாக 5 ஏக்கர் வரையான நிலப்பரப்புக்கு இழப்பீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயிர் சேதமடைந்த விவசாயிகள் உடனடியாக விவசாய மற்றும் விவசாயிகள் காப்புறுதி சபையின் கள அதிகாரிகளிடம் சேதத்தை அறிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், அருகிலுள்ள விவசாய அபிவிருத்தி நிலையங்களில் பராமரிக்கப்படும் சேத அறிவிப்பு பதிவேடுகளிலும் பயிர் சேதத்தை பதிவு செய்ய முடியும்.
📞 மேலதிக தகவல்களுக்கு 1918 என்ற குறுந்தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொள்ளலாம்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் காப்புறுதி சபை அதிகாரிகள் ஏற்கனவே வயல்களுக்கு நேரில் சென்று சேதங்களை மதிப்பீடு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் K.D. லால்காந்த பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டை விரைவாக வழங்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.





