தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் வசித்து வந்த பெண் ஒட்டகச்சிவிங்கி ஒன்று தனது 30ஆவது வயதை நெருங்கிய நிலையில் உயிரிழந்துள்ளது.
தேசிய விலங்கியல் பூங்காக்கள் திணைக்களத்தின் தகவலின்படி, குறித்த ஒட்டகச்சிவிங்கி ஆகஸ்ட் 18ஆம் திகதி உயிரிழந்துள்ளது.
உயிரிழப்பதற்கு முன்னர் குறிப்பிட்ட எந்தவொரு நோயும் பதிவாகவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆரம்பகட்ட அவதானிப்புகளின் அடிப்படையில், வயது முதிர்வு காரணமாக இயற்கையான முறையில் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழப்புக்கான காரணத்தை உறுதிப்படுத்த ஆகஸ்ட் 19ஆம் திகதி பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
பொதுவாக ஒட்டகச்சிவிங்கிகள் காட்டுப் பகுதிகளில் 20 முதல் 25 ஆண்டுகள் வரை வாழ்கின்றன. எனினும், மிருகக்காட்சிசாலை போன்ற பராமரிக்கப்பட்ட சூழலில் அவை அதைவிட நீண்ட காலம் வாழக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தேசிய விலங்கியல் பூங்காக்கள் திணைக்களத்தின் விலங்கு பரிமாற்றத் திட்டத்தின் கீழ், 2026ஆம் ஆண்டு இறுதிக்குள் இலங்கைக்கு இரண்டு ஜோடி புதிய ஒட்டகச்சிவிங்கிகளை கொண்டுவர எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





