இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் எதுவும் இல்லாத நிலையில் சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாடுகளுக்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படும் வெளிநாட்டு நாணய மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு வங்கி மேலாளர்கள் மற்றும் ஒரு வர்த்தகர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு கோட்டை பகுதியில் இயங்கிய பணப் பரிமாற்ற நிலையம் ஒன்றின் ஊடாக இந்தப் பணப்பரிமாற்றங்கள் இடம்பெற்றதாக பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவு (FCID) மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பரிவர்த்தனைகளுக்கு உதவியதற்காக வங்கி அதிகாரிகளுக்கு வாராந்தம் ரூ.30,000 முதல் ரூ.100,000 வரை பணம் வழங்கப்பட்டதாகவும், ஒரு அதிகாரிக்கு தனியாக சுமார் ரூ.1 மில்லியன் வழங்கப்பட்டதாகவும் விசாரணையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு வங்கி மேலாளர்களும் தாங்கள் பணியாற்றிய வங்கிகளிலேயே கைது செய்யப்பட்டிருந்தனர்.
இலங்கையில் இத்தகைய வெளிநாட்டு நாணய குற்றச்சாட்டு தொடர்பில் வங்கி மேலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ள முதலாவது வழக்கு இதுவாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொழும்பு நீதவான் நீதிமன்றம் சந்தேகநபர்கள் ஐவரையும் செப்டெம்பர் 3ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
வெளிநாடுகளுக்கு பொருட்கள் இறக்குமதி செய்யப்படாமல் நூற்றுக்கணக்கான வங்கிக் கணக்குகள் ஊடாக வெளிநாட்டு நாணயம் மாற்றப்பட்டதாகக் கூறப்படும் பரிவர்த்தனைகள் தொடர்பான விசாரணைகளை FCID தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.
Newswire





