இந்தியாவில் பாடசாலை அதிபர் 27 முறை கத்தியால் குத்திக் கொலை – இரு மாணவர்கள் கைது

இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில் பாடசாலை அதிபர் ஒருவர் 27 முறை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 10ஆம் தரத்தைச் சேர்ந்த இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள நாகார்ஜுனா பப்ளிக் பாடசாலையின் அதிபரும் பணிப்பாளருமான 48 வயதுடைய கல்லு ரூபா ரெட்டி, கடந்த ஆகஸ்ட் 12ஆம் திகதி தனது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார்.

கணவர் ஹைதராபாத்தில் இருந்த நிலையில், அவரது தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்காததால் சந்தேகமடைந்து தகவல் வழங்கியதைத் தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

CCTV காட்சிகள், தடயவியல் சான்றுகள், கைரேகைகள் மற்றும் தொழில்நுட்பத் தகவல்களை ஆய்வு செய்த பொலிஸார், 80க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

அதிபரின் இறுதி தொலைபேசி உரையாடலில் அவர் பயன்படுத்தியதாகக் கூறப்படும் “பாபு” என்ற வார்த்தை விசாரணையில் முக்கிய தடயமாக அமைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து பாடசாலையில் இருந்து நீண்டகாலமாக வருகை தராத ஐந்து 10ஆம் தர மாணவர்கள் மீது கவனம் செலுத்தப்பட்டது. அவர்களில் இருவர் அண்மையில் அதிகளவு பணம் செலவிட்டு விருந்துகள் நடத்தியது விசாரணையில் தெரியவந்ததாக பொலிஸார் கூறினர்.

கைது செய்யப்பட்ட மாணவர்கள், அதிபரின் வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்டதாக விசாரணையில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. முன்னதாக அவர்களது விடுதி பைகளில் பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அதிபர் அவர்களை எச்சரித்து பெற்றோருக்கு தகவல் வழங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரின் கூற்றுப்படி, மாணவர்கள் சில நாட்களாக கொள்ளைக்குத் திட்டமிட்டு கத்தி மற்றும் கையுறைகளை பெற்றுள்ளனர். சம்பவத்தன்று வீட்டிற்குள் சென்ற மாணவர்களில் ஒருவர் ரூ.2.5 இலட்சம் பணத்தை கண்டெடுத்துள்ளார். வெளியேறும்போது அவரது முகமூடி விலகியதால் அதிபர் அவரை அடையாளம் கண்டுகொண்டதாகவும், இதையடுத்து அவர் அதிபரை 27 முறை கத்தியால் குத்தியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பின்னர் இருவரும் பணத்துடன் தப்பிச் சென்று கோவாவுக்கு சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்களிடமிருந்து ரூ.1,54,000 பணம், இரத்தக்கறை படிந்ததாகக் கூறப்படும் சில பணத்தாள்கள், கொள்ளைப் பணத்தில் வாங்கப்பட்டதாகக் கூறப்படும் iPhone மற்றும் அதிபரின் கையடக்கத் தொலைபேசி ஆகியவை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், குற்றத்தை மேற்கொள்வதற்கு முன்னர் விரைவாக பணம் சம்பாதிப்பது தொடர்பான வழிகளை மாணவர்கள் இணையத்தில் தேடியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore