இலங்கை நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) நாடளாவிய ரீதியில் மேற்கொண்ட 108 சுற்றிவளைப்புகளில், 84 வர்த்தக நிலையங்கள் உரிய ரசீதுகள், பில்கள் அல்லது விலைப்பட்டியல்களை சமர்ப்பிக்கத் தவறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 18 மற்றும் 19ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட சோதனை நடவடிக்கைகளில், இறக்குமதி செய்யப்பட்ட சருமத்தை வெளுப்பாக்கும் கிரீம்கள், முகம் மற்றும் உடலுக்கான அழகுசாதனப் பொருட்கள், வாசனைத் திரவியங்கள், முடி பராமரிப்பு பொருட்கள் மற்றும் விளையாட்டு காலணிகள் உள்ளிட்டவை பரிசோதிக்கப்பட்டன.
பொருட்கள் எங்கிருந்து பெறப்பட்டன என்பதை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் இல்லாத வர்த்தக நிலையங்களில் இருந்து சுமார் ரூ.15 இலட்சம் பெறுமதியான பொருட்கள் CAA அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், குறித்த பொருட்களின் விநியோகஸ்தர்கள் மற்றும் வழங்குநர்களை அடையாளம் காண மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
2026ஆம் ஆண்டில் இதுவரை கிரீம்கள் மற்றும் திரவப் பொருட்கள் தொடர்பாக சுமார் 785 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக CAA தெரிவித்துள்ளது.
CAA Direction No. 83ன் கீழ், உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள், களஞ்சிய உரிமையாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் தங்களிடம் உள்ள பொருட்கள் எவ்வாறு பெறப்பட்டன என்பதை உறுதிப்படுத்தும் ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்.
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் பொருட்களின் மூலத்தை உறுதி செய்வதற்கான இந்த சோதனை நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் தொடரும் என CAA தெரிவித்துள்ளது.





