இலங்கையிலிருந்து புதிய அன்னாசிப்பழங்களின் முதல் தொகுதி பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதன் மூலம், நாட்டின் விவசாய ஏற்றுமதியில் புதிய மைல்கல் எட்டப்பட்டுள்ளது.
முதல் 20 அடி கொள்கலன் இலங்கை அன்னாசிப்பழங்கள் இன்று (21) ஏற்றுமதிக்காக தயார்படுத்தப்பட்டதுடன், இந்த ஏற்றுமதி நடவடிக்கையை C R Exports (Pvt) Ltd முன்னெடுத்துள்ளது.
இலங்கை மற்றும் பாகிஸ்தானின் தேசிய தாவரப் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு இடையிலான தொழில்நுட்ப கலந்துரையாடல்கள் மற்றும் ஒத்துழைப்பின் அடிப்படையில், புதிய அன்னாசிப்பழங்களை பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்வதற்கான தேவையான தாவர சுகாதார (Phytosanitary) நடைமுறைகள் உருவாக்கப்பட்டன.
சுமார் 252 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட பாகிஸ்தான், இலங்கை அன்னாசிப்பழங்களுக்கு அதிக வாய்ப்புள்ள புதிய சந்தையாக கருதப்படுகிறது. அந்நாடு ஆண்டுதோறும் சுமார் 2,000 முதல் 5,000 மெட்ரிக் தொன் அன்னாசிப்பழங்களை இறக்குமதி செய்வதுடன், அதன் மதிப்பு சுமார் 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அன்னாசிப்பழங்களின் தரம், புத்துணர்ச்சி மற்றும் தனித்துவமான சுவை, அத்துடன் இலங்கையும் பாகிஸ்தானும் புவியியல் ரீதியாக அருகாமையில் இருப்பது ஆகியவை சந்தையில் போட்டித்திறனை அதிகரிக்கும் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
ஏற்றுமதிக்காக, Good Agricultural Practices (GAP) சான்றிதழ் பெற்ற பண்ணைகளில் இருந்து பெறப்படும் அன்னாசிப்பழங்களே பயன்படுத்தப்பட வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் விவசாயத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
2025ஆம் ஆண்டில் இலங்கை அன்னாசிப்பழப் பொருட்களின் ஏற்றுமதி மூலம் சுமார் 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டியுள்ளது. புதிய பாகிஸ்தான் சந்தை மூலம் இந்தத் துறையை மேலும் விரிவுபடுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், அவகாடோ மற்றும் ஆரஞ்சு உள்ளிட்ட பிற விவசாயப் பொருட்களையும் பாகிஸ்தான் சந்தைக்கு அறிமுகப்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஆராயப்பட்டு வருகின்றன.
இந்த புதிய ஏற்றுமதி வாய்ப்பு, பாகிஸ்தான்–இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் (PSFTA) மூலம் கிடைக்கும் நன்மைகளை அதிகரிப்பதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.





