கொழும்பு, ஆகஸ்ட் 22: கால்நடைகளிடையே ஏற்படும் கால் மற்றும் வாய் நோய் (Foot and Mouth Disease – FMD) மற்றும் Lumpy Skin Disease (LSD) ஆகிய நோய்களின் பரவலைத் தடுக்கும் வகையில் நாடளாவிய ரீதியில் இலவச தடுப்பூசி வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு தெரிவித்துள்ளது.
இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் காலங்களில் கால்நடைகளிடையே நோய்கள் வேகமாகப் பரவுவதைத் தடுப்பதுடன், நாட்டின் கால்நடை வளத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதும் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இந்த தடுப்பூசி திட்டத்திற்காக ரூ.152.305 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
🔹 FMD தடுப்பூசிக்கு: ரூ.79,275,000
🔹 LSD தடுப்பூசிக்கு: ரூ.73,030,000
🔹 மொத்தம்: ரூ.152,305,000
இலவச தடுப்பூசிகள் மாவட்ட மட்டத்தில் இயங்கி வரும் அனைத்து பிரதேச கால்நடை வைத்திய நிலையங்களுக்கும் விநியோகிக்கப்பட்டுள்ளன.
எனவே, மாடுகள், எருமைகள் மற்றும் ஆடுகளின் உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள், தங்களது கால்நடைகளை அருகிலுள்ள கால்நடை வைத்திய நிலையங்களுக்கு அழைத்துச் சென்று இலவச தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையின் மூலம் நாட்டின் கால்நடை வளத்தைப் பாதுகாப்பதுடன், கால்நடைத் துறையையும் மேலும் வலுப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.





