தற்போது நிலவும் எல் நினோ காலநிலை நிலைமை காரணமாக, இந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் இலங்கையில் வழக்கத்தை விட அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.
இதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு, நீர்நிலைகள் நிரம்பி வழிதல் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
ஆசிய பிராந்திய நாடுகளில் எல் நினோ நிலைமையால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் தொடர்பில் வெளியிடப்பட்ட புதிய மதிப்பீட்டு அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையின்படி, எல் நினோ நிலைமையால் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டிய நாடுகளில் இலங்கையும் அடங்குகிறது. இலங்கையைப் பொறுத்தவரையில், வறட்சியைக் காட்டிலும் இயல்பை விட அதிகமான மழைவீழ்ச்சியே முக்கிய காலநிலை அபாயமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நாட்டின் பல பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவில் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும், டிசம்பர் முதல் பெப்ரவரி வரையிலான காலப்பகுதியில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, வழக்கத்தை விட அதிக மழை பெய்யக்கூடும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், காலநிலை அபாயங்களுடன் மத்திய கிழக்கில் நிலவும் நெருக்கடியின் தாக்கமும் இணைந்து இலங்கையின் பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்கக்கூடும் என ஐ.நா. அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
எவ்வாறாயினும், இந்த அபாயம் இன்னும் பாரிய தாக்கமாக மாறாத நிலையில், முன்னெச்சரிக்கை மற்றும் முன்ஆயத்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வாய்ப்பு இன்னும் காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இதனிடையே, அனுராதபுரம் மாவட்டத்தில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக பல நீர்த்தேக்கங்கள் வற்றிப்போயுள்ளதாக மாவட்ட செயலாளர் ரஞ்சித் விமலசூரிய தெரிவித்துள்ளார்.
அதேவேளை, எல் நினோ நிலைமையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வருவதாக விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.





