இலங்கையின் கனிமத் துறையை மேம்படுத்துவதற்கும், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீடுகளை அதிகரிப்பதற்கும் அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
2026 தேசிய கனிமக் கொள்கைக்கு அமைவாக, ஏற்றுமதி நோக்குடைய கனிமத் துறையை அபிவிருத்தி செய்வது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (31) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது.
இலங்கை கனிம மணல் சங்கம் மற்றும் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் உள்ளிட்ட நிறுவனங்களின் அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர்.
இலங்கையின் கனிம வளங்களை ஆராய்தல், அகழ்தல் மற்றும் அவற்றுக்கு பெறுமதி சேர்த்தல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், தேசிய பொருளாதார வளர்ச்சிக்கும் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதற்கும் கனிம வளங்களை முறையாக பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், முதலீட்டாளர்களுக்கு ஊக்குவிப்புகளை வழங்குதல் மற்றும் உள்நாட்டு உற்பத்தித் துறையை வலுப்படுத்த ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தியை ஊக்குவித்தல் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
அரச நிறுவனங்களிடமிருந்து அனுமதிகள் மற்றும் சுரங்க உரிமங்களைப் பெறுவதில் முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான அவசர நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.
தற்போதைய கொள்கை கட்டமைப்பில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதுடன், முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கைகளில் அதிகபட்ச வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் இடையில் சிறந்த ஒருங்கிணைப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
தொழில் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளும் இக்கலந்துரையாடலில் பங்கேற்றனர்.





