வைத்திய அதிகாரிகளுக்கான இடைநிலைத் தரநிலையை உருவாக்க 6 பேர் கொண்ட நிபுணர் குழு

வைத்திய அதிகாரிகளுக்கான இடைநிலைத் தரநிலை ஒன்றை உருவாக்குவது தொடர்பில் ஆராய்ந்து பரிந்துரைகளை முன்வைப்பதற்காக 6 பேர் கொண்ட நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸவின் பணிப்புரைக்கு அமைய, சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்கவினால் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார மற்றும் ஊடகத்துறை பிரதி அமைச்சர் வைத்தியர் ஹங்சக விஜேமுனி குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வைத்தியர் அமில சுரங்கநாயக்க குழுவின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதுடன், வைத்தியர் டபிள்யூ.கே. விக்ரமசிங்க, வைத்தியர் சமிந்த சமரகோன், சிரேஷ்ட பேராசிரியர் எச்.டி.என்.பி. ஓபாத மற்றும் சிரேஷ்ட பேராசிரியர் திலீப் டி சில்வா ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இடைநிலைத் தரநிலையை வரையறுத்தல், அதில் உள்ளடக்கப்பட வேண்டிய மருத்துவ நிபுணத்துவத் துறைகளை அடையாளம் காணுதல், வைத்திய அதிகாரிகளை உரிய துறைகளுக்கு தெரிவு செய்யும் நடைமுறை மற்றும் அவர்கள் அத்துறையில் சேவையாற்ற வேண்டிய கால எல்லை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் குழு விரிவான ஆய்வை மேற்கொள்ளவுள்ளது.

அத்துடன், வைத்திய அதிகாரிகளுக்கான நன்மைகள் மற்றும் இடமாற்றத் திட்டம் தொடர்பிலும் ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.

சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்கள் மற்றும் ஏனைய பங்குதாரர்களின் கருத்துக்கள் மற்றும் யோசனைகளைப் பெற்றுக்கொண்டு, ஒரு மாதத்திற்குள் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சிடம் பரிந்துரைகளை சமர்ப்பிக்குமாறு குழுவிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore