நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 26ஆம் திகதி வடக்கு நேபாளத்தின் ராசுவா மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால் உயிரிழப்புகள் மற்றும் பாரிய சொத்து சேதங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும், காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் மற்றும் மீள்கட்டமைப்பு நடவடிக்கைகளுக்கான அவசரத் தேவை ஏற்பட்டுள்ளது.
இலங்கைக்கும் நேபாளத்திற்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் கலாசார, சமயத் தொடர்புகளை கருத்திற்கொண்டு இந்த மனிதாபிமான உதவியை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட நேபாள மக்களுக்கு தேவையான நிவாரண நடவடிக்கைகளில் இந்த நிதியுதவி பயன்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.





