தலவாக்கலை, செப்டம்பர் 2: டெவோன் நீர்வீழ்ச்சியை நோக்கி செல்லும் டெவோன் ஆற்றுப் பகுதியில் மாட்டிறைச்சி எலும்புகள் மற்றும் இறைச்சிக் கழிவுகளை சட்டவிரோதமாகக் கொட்டியதாகக் கூறப்படும் இரு இறைச்சிக் கடை ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (01) கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பொது சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட நடவடிக்கையின் போது, சந்தேகநபர்கள் கழிவுகளை ஆட்டோவில் கொண்டு வந்து ஆற்றில் கொட்டியபோது கையும் களவுமாக பிடிபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கழிவுகளை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட ஆட்டோவும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கிடைத்த தகவலின் அடிப்படையில், கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி கே. சுதர்சனின் ஆலோசனையின் பேரில் பொது சுகாதார பரிசோதகர்கள் குழுவொன்று சம்பவ இடத்திற்குச் சென்று இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொட்டகலை ரொசிட்டா பகுதியில் அமைந்துள்ள 60 அடி ரயில்வே இரும்புப் பாலத்திற்கு அருகிலேயே இந்தக் கழிவுகள் தொடர்ச்சியாக கொட்டப்பட்டு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டெவோன் ஓடையின் குறித்த பகுதியை அண்மித்த பகுதிகளில் கிறிஸ்டஸ் பார்ம் உள்ளிட்ட பல தோட்டங்களுக்குச் செல்லும் பாதைகள் காணப்படுகின்றன. இந்தப் பாதைகளை தினசரி பயன்படுத்தும் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கழிவுகள் கொட்டப்பட்டதால் சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்பட்டதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

விசாரணைகளில், கொட்டகலை நகரில் இயங்கி வரும் மாட்டிறைச்சிக் கடையொன்றில் நாளாந்தம் சேகரிக்கப்படும் எலும்புகள் மற்றும் ஏனைய இறைச்சிக் கழிவுகளை முறையாக அகற்றுவதற்குப் பதிலாக, ஊழியர்கள் மூலம் ஆட்டோவில் ஏற்றி டெவோன் ஓடைக்கு கொண்டு சென்று கொட்டப்பட்டு வந்ததாக தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் நேற்று ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, இருவருக்கும் தலா ரூ. 200,000 பெறுமதியான சரீரப் பிணை வழங்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் 10ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இதனிடையே, கொட்டகலை நகரில் உள்ள சில கோழி இறைச்சிக் கடைகளிலிருந்தும் இதேபோன்று கழிவுகள் டெவோன் ஓடையில் கொட்டப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவ்வாறான சட்டவிரோத கழிவு அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு எதிராகவும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
— செ. திவாகரன்





