இந்தோனேசியாவின் அனக் கிரகடோவா (Anak Krakatoa) எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட எரிமலைச் சாம்பல் மேகங்கள் காரணமாக, கொழும்பு – ஜகார்த்தா இடையிலான இன்றைய விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
இதன்படி, இன்று (07) இயக்கப்படவிருந்த UL 364 (கொழும்பு – ஜகார்த்தா) மற்றும் UL 365 (ஜகார்த்தா – கொழும்பு) ஆகிய இரு விமான சேவைகளும் பாதுகாப்பு காரணங்களுக்காக இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.
எரிமலை வெடிப்பினால் உருவான சாம்பல் மற்றும் சிலிக்கா கலந்த பாறைத் துகள்கள் பரந்த பகுதிகளில் பரவியுள்ளதால் விமானப் பயணங்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, இத்தகைய துகள்கள் விமானங்களின் இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என விமானப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, இந்தோனேசிய விமானப் போக்குவரத்து அதிகாரிகள் ஜகார்த்தாவின் Soekarno–Hatta சர்வதேச விமான நிலையம் உட்பட பல விமான நிலையங்களின் செயல்பாடுகளை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளனர்.
மேலும், இலங்கையை நோக்கி மேற்குப் பகுதி விமானப் பாதை வழியாக விமானங்கள் பயணிப்பதற்கும் தற்காலிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலைமை காரணமாக நேற்று இரவு அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கை நோக்கிப் பயணித்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் சில விமானங்களும் பாதிக்கப்பட்ட வான்பரப்பைத் தவிர்க்கும் வகையில் தமது பயணப் பாதையை மாற்றியமைத்திருந்தன.
இதேவேளை, அவுஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியாவுக்கு இடையே சேவைகளை முன்னெடுத்து வரும் சில மத்திய கிழக்கு விமான நிறுவனங்களும் எரிமலைச் சாம்பல் பரவியுள்ள வான்பரப்பைத் தவிர்க்கும் வகையில் தமது விமானப் பாதைகளில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளன.
அனக் கிரகடோவா எரிமலை வெடிப்பின் தாக்கத்தால் இந்தோனேசியாவில் பல விமான நிலையங்களின் செயற்பாடுகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், பிராந்திய ரீதியாக சர்வதேச விமானப் போக்குவரத்திலும் குறிப்பிடத்தக்க இடையூறு ஏற்பட்டுள்ளது.





