ஜெர்மனியின் கிழக்கு மாநிலமான Saxony-Anhalt இல் நடைபெற்ற மாநிலத் தேர்தலில் வலதுசாரி Alternative for Germany (AfD) கட்சி குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளது.
தற்காலிக தேர்தல் முடிவுகளின்படி, AfD கட்சி 43.8% வாக்குகளை பெற்றுள்ள நிலையில், முக்கிய போட்டியாளரான பழமைவாத CDU 17.2% வாக்குகளைப் பெற்றுள்ளது.
எனினும், மாநில நாடாளுமன்றத்தில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதற்குத் தேவையான 42 ஆசனங்களை AfD பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய கணிப்பில் 83 ஆசனங்களைக் கொண்ட மாநில நாடாளுமன்றத்தில் அக்கட்சி சுமார் 39 ஆசனங்களை பெறக்கூடும்.
இதனால் AfD கட்சிக்கு தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும், கட்சியின் மாநிலத் தலைவர் Ulrich Siegmund, தேர்தல் முடிவு தங்களுக்கு ஆட்சி அமைப்பதற்கான மக்கள் ஆணையை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
“இது இந்த மாநிலத்துக்கான வெற்றி மட்டுமல்ல; முழு ஜெர்மனிக்கும் ஒரு சமிக்ஞை” என்ற கருத்தையும் அவர் முன்வைத்துள்ளார்.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஜெர்மனியின் எந்தவொரு மாநிலத்திலும் வலதுசாரி தீவிரக் கட்சி ஒன்று ஆட்சியைக் கைப்பற்றியதில்லை. அந்த வகையில் Saxony-Anhalt தேர்தல் முடிவு ஜெர்மனியின் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
AfD கட்சியின் வெற்றிக்கு குடியேற்றக் கொள்கை, பாதுகாப்பு மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட விவகாரங்களில் வாக்காளர்களிடையே காணப்படும் அதிருப்தி முக்கிய காரணங்களாகக் குறிப்பிடப்படுகின்றன. குறிப்பாக ஜெர்மனியின் கிழக்குப் பகுதிகளில் AfD கட்சிக்கு கணிசமான ஆதரவு காணப்படுகிறது.
மாநிலத்தில் AfD கட்சியுடன் கூட்டணி அமைப்பதை பிரதான அரசியல் கட்சிகள் இதுவரை நிராகரித்து வருகின்றன. இதன் காரணமாக அடுத்த கட்ட அரசியல் பேச்சுவார்த்தைகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
இதனிடையே, இடதுசாரி ஜனரஞ்சகக் கட்சியான BSW மாநில நாடாளுமன்றத்திற்குள் நுழையும் நிலையில் உள்ளது. அக்கட்சி சுமார் ஐந்து ஆசனங்களைப் பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், எதிர்காலத்தில் AfD ஆட்சி அமைக்க முயற்சிக்கும் போது BSW-வின் நிலைப்பாடு கவனத்தை ஈர்த்துள்ளது.
தேர்தலில் வாக்காளர் பங்கேற்பும் அதிகமாக இருந்தது. மொத்த வாக்குப்பதிவு சுமார் 77.8% ஆக பதிவாகியுள்ளது.
AfD-யின் இந்த வெற்றி ஜெர்மனியின் தேசிய அரசியலிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக அரசியல் ஆய்வாளர்களால் பார்க்கப்படுகிறது. குறிப்பாக கிழக்கு மாநிலங்களில் கட்சியின் செல்வாக்கு தொடர்ந்து அதிகரித்து வருவது, அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் தொடர்பில் கவனத்தை ஈர்த்துள்ளது.





