இந்திய தலைநகர் டெல்லியின் தென்மேற்கு பகுதியில் உள்ள சத்யா நிகேதன் பகுதியில், ஐந்து மாடிகளைக் கொண்ட குடியிருப்பு கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் குறைந்தது 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால் மீட்புப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சுமார் 1.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மாணவர்கள் அதிகளவில் தங்கியிருந்ததாக கூறப்படும் குறித்த கட்டிடத்தில் விபத்து இடம்பெற்ற நேரத்தில் பலர் தங்களது அறைகளில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மீட்கப்பட்டவர்களில் 12 பேர் இதுவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் 6 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிகிச்சை பெறுபவர்களின் நிலை தற்போது சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா தெரிவித்த தகவலின்படி, கட்டிடத்தின் அடித்தளத்தில் தேங்கியிருந்த நீர் மற்றும் அங்கு இடம்பெற்று வந்த பழுதுபார்ப்பு பணிகள் விபத்துக்கு காரணமாக இருந்திருக்கலாம் என ஆரம்பகட்டமாக சந்தேகிக்கப்படுகிறது.
அதேவேளை, தொடர் மழையால் கட்டிடத்தின் கட்டமைப்பு பலவீனமடைந்திருக்க வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அடித்தளத்தில் கட்டுமான அல்லது அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டனவா என்பதும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
மீட்புப் பணியாளர்கள் கட்டிட இடிபாடுகளை அகற்றி, அதற்குள் சிக்கியுள்ளவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்தில் இருந்து சுமார் 80 சதவீதமான இடிபாடுகள் அகற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது அடித்தளப் பகுதியில் உள்ள இடிபாடுகள் அகற்றப்படுவது முக்கிய பணியாக இடம்பெற்று வருகிறது.
மீட்புப் பணிகளின்போது இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த சில மாணவர்கள் தொலைபேசி மூலம் உதவி கோரியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அருகில் இருந்தவர்கள் கட்டிடம் இடிந்து விழுந்த சத்தம் பூகம்பம் போன்றதாக இருந்ததாக தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக கட்டிடத்தின் உரிமையாளருக்கு எதிராக பொலிஸார் வழக்குப் பதிவு செய்து, அவரைத் தேடி வருகின்றனர். அருகிலுள்ள மற்றொரு கட்டிடமும் பாதுகாப்பு காரணங்களுக்காக காலி செய்யப்பட்டுள்ளது.
மாணவர்கள் அதிகளவில் வசிக்கும் சத்யா நிகேதன் பகுதியில் பல தனியார் விடுதிகள் மற்றும் வாடகை தங்குமிடங்கள் உள்ளன. கட்டிடங்களின் பாதுகாப்பு நிலை மற்றும் அவற்றில் மேற்கொள்ளப்படும் கட்டுமான மாற்றங்கள் தொடர்பில் போதுமான கண்காணிப்பு இல்லை என்ற குற்றச்சாட்டுகளும் அப்பகுதி மாணவர்களால் முன்வைக்கப்பட்டுள்ளன.





