கட்டுநாயக்க | செப்டம்பர் 9, 2026
சுமார் ரூ.5 கோடியே 37 இலட்சத்து 20 ஆயிரம் பெறுமதியான ‘குஷ்’ போதைப்பொருளை நாட்டுக்குள் கடத்தி வர முயன்றதாகக் கூறப்படும் இரண்டு இலங்கைப் பெண்கள் இன்று (09) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளால் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் தெமட்டகொட மற்றும் தொட்டலங்க பகுதிகளைச் சேர்ந்த 33 மற்றும் 35 வயதுடைய பெண்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இன்று காலை 10.55 மணியளவில் தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து UL-403 விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
சந்தேகநபர்கள் கொண்டு வந்த இரண்டு பயணப் பொதிகளை சோதனையிட்டபோது, 5 பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 கிலோ 372 கிராம் ‘குஷ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.





