எல் நினோ காலநிலைத் தாக்கத்துடன் தொடர்புடைய வறட்சியான காலநிலை காரணமாக இலங்கையின் 8 மாவட்டங்களில் 49,344 குடும்பங்களைச் சேர்ந்த 161,451 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் 36 பிரதேச செயலகப் பிரிவுகள் இந்த நிலைமையால் பாதிக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர குடிநீர் விநியோக நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது 43,221 குடும்பங்களைச் சேர்ந்த 141,312 பேருக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொனராகலை, மட்டக்களப்பு, மாத்தளை, பதுளை, அம்பாறை உள்ளிட்ட மாவட்டங்கள் வறட்சியால் குறிப்பிடத்தக்க அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. முன்னைய அறிக்கையிலும் மொனராகலை மாவட்டமே அதிகளவு பாதிப்பை எதிர்கொண்ட பகுதியாக பதிவாகியிருந்தது.
இதேவேளை, இலங்கையின் வளிமண்டலவியல் திணைக்களம் எல் நினோ நிலைமை வலுப்பெறுவதற்கான அதிக வாய்ப்பு இருப்பதாக எச்சரித்துள்ளதுடன், அக்டோபர்–டிசம்பர் காலப்பகுதியில் வலுவான எல் நினோ உருவாகும் சாத்தியம் 98% வரை இருப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
📌 பாதிக்கப்பட்ட மாவட்டங்கள்:
அம்பாறை • அனுராதபுரம் • பதுளை • மட்டக்களப்பு • மாத்தளை • மொனராகலை • பொலன்னறுவை • இரத்தினபுரி





