தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து இலங்கைக்கு வந்த 44 வயதுடைய வர்த்தகர் ஒருவர், 668 கிராம் ‘குஷ்’ போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாத்தறை – வெலிகம பகுதியைச் சேர்ந்த குறித்த நபர், நேற்று (12) மாலை பேங்கொக்கிலிருந்து இலங்கைக்கு வந்துள்ளார்.
இதன்போது, அவர் 668 கிராம் குஷ் போதைப்பொருளை மூன்று பொதிகளாக தயாரித்து, தான் அணிந்திருந்த காற்சட்டையில் மறைத்து நாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமான நிலையத்தில் உள்ள வர்த்தகர்களுக்கான பசுமை வழி (Green Channel) ஊடாக வெளியேற முயன்றபோதே சுங்க அதிகாரிகளால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட குஷ் போதைப்பொருளின் பெறுமதி சுமார் 66 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரும், அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகையும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.





