சிறுவர் குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் அல்லது வழக்குகளுடன் தொடர்புடைய நபர்கள் அரச சேவையில், குறிப்பாக சிறுவர்களுடன் நேரடியாக தொடர்புபடும் பணிகளில் இணைவதைத் தடுக்கும் வகையில் புதிய நடைமுறையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அமைச்சர், அரச சேவையில் புதிதாக இணையும் போது, குறிப்பாக சிறுவர்களை அணுகக்கூடிய பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் சிறுவர் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் அல்ல என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழை பெற்றுக்கொள்ளும் வகையில் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
இதற்கான சான்றிதழை பொலிஸார் அல்லது தொடர்புடைய உத்தியோகபூர்வ நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளும் நடைமுறை முன்னெடுக்கப்படவுள்ளது.
மேலும், தற்போது அரச சேவையில் பணியாற்றி வரும் அதிகாரிகளும் தங்களது சேவைத் திறன் தடைகள் (Service Efficiency Bar) மற்றும் சம்பள உயர்வுகள் உள்ளிட்ட சேவைத் தேவைகளின்போது, குறிப்பிட்ட காலப்பகுதியில் சிறுவர் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் அல்ல என்பதை உறுதிப்படுத்தும் வகையில் குறித்த சான்றிதழை புதுப்பித்து சமர்ப்பிக்க வேண்டிய நிலை ஏற்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும், எதிர்காலத்தில் இதுபோன்ற நடைமுறைகள் நாட்டிற்கு அவசியமானவை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.





