லிதுவேனியாவின் வான்பரப்புக்குள் நுழைந்த ட்ரோன் ஒன்றை நேட்டோ போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி கிட்டானஸ் நௌசெடா தெரிவித்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை அதிகாலை, அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கௌனஸ் (Kaunas) அருகிலுள்ள தெற்கு லிதுவேனியா வழியாக, அண்டை நாடான பெலாரஸிலிருந்து குறித்த ட்ரோன் நுழைந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ட்ரோனின் தோற்றம் மற்றும் அது எந்த நாட்டைச் சேர்ந்தது என்பது தொடர்பில் இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.
ட்ரோன் ஊடுருவல் தொடர்பான எச்சரிக்கைகள் தலைநகர் வில்னியஸ் உள்ளிட்ட பகுதிகளில் ஒலிக்கப்பட்டதுடன், பொதுமக்களின் தொலைபேசிகளுக்கும் அவசர எச்சரிக்கை செய்திகள் அனுப்பப்பட்டன. பாதுகாப்பான இடத்துக்குச் சென்று, அடுத்த அறிவிப்பு வரும் வரை காத்திருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
லிதுவேனிய ஆயுதப் படையினரும், நேட்டோவின் வான் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இத்தாலிய விமானப்படை விமானிகளும் ட்ரோன் ஊடுருவலுக்கு விரைவாக பதிலளித்ததாக லிதுவேனிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
ரஷ்யா–உக்ரைன் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஐரோப்பிய நாடுகளின் வான்பரப்புக்குள் இராணுவ ட்ரோன்கள் தவறுதலாக அல்லது வேறு காரணங்களால் நுழையும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
லிதுவேனியா, எஸ்தோனியா மற்றும் லாட்வியா ஆகிய பால்டிக் நாடுகள் 2004ஆம் ஆண்டு நேட்டோவில் இணைந்தன. நேட்டோவின் Article 5 விதியின்படி, ஒரு உறுப்பு நாட்டின் மீது நடத்தப்படும் ஆயுதத் தாக்குதல் அனைத்து உறுப்பு நாடுகளின் மீதான தாக்குதலாகக் கருதப்படும்.





