மீனைப் போன்ற தோற்றத்திலும், அதன் நீச்சல் இயக்கத்தைப் பின்பற்றும் வகையிலும் உருவாக்கப்பட்ட நவீன நீருக்கடிப் ரோபோவை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது.
BG-5 Golden Dragon Fish எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ, தங்க அரோவானா மீனை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. பல இணைப்புகளைக் கொண்ட வால் அமைப்பின் மூலம் உண்மையான மீனைப் போன்று அலைவான இயக்கத்தில் நீந்தும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
பெய்ஜிங்கில் நடைபெற்ற 2026 China International Fair for Trade in Services (CIFTIS) கண்காட்சியில் இந்த ரோபோ காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
சுமார் 3 கிலோகிராம் எடையுடைய இந்த ரோபோ, 640 மில்லிமீற்றர் நீளம், 204 மில்லிமீற்றர் அகலம் மற்றும் 90 மில்லிமீற்றர் உயரம் கொண்டதாகும். அதிகபட்சமாக 5 மீற்றர் ஆழத்தில் இயங்கக்கூடியதுடன், விநாடிக்கு 0.6 மீற்றர் வேகத்தில் பயணிக்கக்கூடியது என தெரிவிக்கப்படுகிறது.
முக்கியமாக, முன்கூட்டியே நிரலிடப்பட்ட பாதையில் மட்டும் இயங்காமல், அதில் பொருத்தப்பட்டுள்ள உணரிகள் மூலம் நீருக்கடியில் உள்ள தடைகளை கண்டறிந்து, அவற்றைத் தவிர்த்து தானாகவே தனது பாதையைத் திட்டமிடும் திறனையும் இந்த ரோபோ கொண்டுள்ளது.
இதன் மேம்படுத்தப்பட்ட BG-5V பதிப்பு பாதைத் திட்டமிடல், பணிப் பகிர்வு, குழு இயக்கக் கட்டுப்பாடு மற்றும் பல ரோபோக்கள் இணைந்து செயல்படுதல் போன்ற திறன்களையும் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறிய அளவு மற்றும் மீனைப் போன்ற வடிவமைப்பு காரணமாக, ஆழமற்ற நீர்ப்பகுதிகளில் தேடுதல், கண்காணிப்பு மற்றும் நீருக்கடிப் புலனாய்வு பணிகளுக்கு இந்த தொழில்நுட்பம் எதிர்காலத்தில் பயன்படுத்தப்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





